ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட முன்வந்தால் தார்மீக ஆதரவு அளிக்கப்படும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட தமாகா ஆதரவு தெரிவித்துள்ளது. அத்தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கத்தை நிறுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிடுவோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒருவேளை பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவளிப்போம். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கூட்டணி கட்சித் தலைவரான தமாகாவின் ஜிகே வாசனை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பாஜகவின் ஆதரவை பெற ஓ.பன்னீர் செல்வம் கமலாலயம் வந்தார். ஓ.பன்னீர் செல்வம், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, தங்கள் தரப்பு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பாஜக உடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ‘பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. பாஜக மாநில தலைவரையும், பாஜக முன்னணி தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரிக்க தயார் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை’ என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.