விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரம்!

விசாகப்பட்டினத்தில் ரூ.268 கோடியில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடா மையப் பகுதியில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் அம்பேத்கர் நினைவு இல்லம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் ரூ.268 கோடி செலவில், 206 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவப்படுகிறது. சிலை அமைக்க 352 மெட்ரிக் டன் இரும்பு, 112 மெட்ரிக் டன் பித்தளை பயன்படுத்தப்பட உள்ளது. பீடம் உட்பட சிலையின் மொத்த உயரம் 206 அடி இருக்கும். வளாகத்தில் 2000 பேர் அமரும் வகையில் மாநாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஆய்வு கூட்டம் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் தாடே பள்ளியில் உள்ள முகாம் அலுவலகத்தில் நடந்தது.

அம்பேத்கர் சிலையுடன் நினைவு இல்லம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.268 கோடி செலவிடப்படுகிறது. ஸ்மிருதி வனம் என்ற பெயரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்தில் பணிகள் குறித்து அதிகாரிகள் முதல்-அமைச்சரிடம் விளக்கி கூறினர். மேலும் குடிமராமத்து பணிகள், நினைவு இல்லத்தை அழகுபடுத்துதல், மைதானத்தை பிரதான சாலையுடன் இணைப்பது குறித்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். வருகிற 31-ந் தேதிக்குள் சிலையின் பாகங்கள் விஜயவாடாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க கண்காணிப்பு உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.