தமிழ்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும், தொடர்ந்து தமிழ் மொழியைக் கற்று வருவதாகவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் பேசியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். அப்போது, பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆளுநர் பேசினார். அப்போது உறுதியாகவும், பணிவாகவும் இருந்து சிறப்பான பணியை ஆற்றுங்கள் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தினார். மேலும் ஆளுநர் ரவி பேசியதாவது:-
என்னுடைய பணி அனுபவத்தில் கேரளாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பை போதுமான அளவு அறியாதது வருத்தம் அளிக்கிறது. நான் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன். தற்போது தமிழில் படிக்கிறேன். தமிழில் பேசுவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறேன். தமிழ்நாடு சிறந்த இடம். இங்குள்ள மக்கள் சிறப்பானவர்கள். தமிழ் மொழியும், இலக்கியங்களும் மிகவும் பழமையானவை.
இரண்டாயிரம் ஆண்டு கலாச்சாரம், பண்பாடு தமிழ்நாட்டில் உள்ளது. தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள். மாநிலங்களில் ஆங்காங்கே சிறு, சிறு பிரச்சனைகள் இருந்தாலும், இந்திய மக்கள் ஒற்றுமையின் பலத்தால் இணைந்து இருந்தனர். பிரிட்டிஷ் மிஷினரி வந்தபோது தான் தமிழ்நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தினர். குறிப்பாக, பல ஆண்டுகளாக இருந்த ராமேஸ்வரம் முதல் காசி வரை செல்லும் முறையை நிறுத்த முயற்சித்தனர்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது இங்கு வாருங்கள். தமிழ்நாட்டின் கட்டிடக்கலை அத்தனை அழகு கொண்டது. ராமேஸ்வரம், மதுரை கோயில்கள் அனைத்து சிறப்புகளையும் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களின் கட்டிடக் கலை முன்பு, கிரேக்க கட்டடக்கலை கூட தோற்றுவிடும். தமிழர் கலாசாரம், அறிவு எவ்வளவு மகத்தானது என்பதை இது காட்டுகிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளால், வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. எந்த மாநிலத்துக்குச் சென்று பணியாற்றினாலும், அம்மாநில மொழியை கற்றுக் கொண்டால் மக்களுடன் நன்கு பழக உதவியாக இருக்கும். நேர்மையான எண்ணங்களுடன் செயல்படுங்கள். உங்கள் பணியை செய்யுங்கள். உங்கள் பணியில் நீங்கள் சிறந்தவராக விளங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.