அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றார். இவர், அதற்கு முன்பு பாரக் ஒபாமா காலத்தில் துணை அதிபராகவும் இருந்தார். இந்த நிலையில், துணை அதிபராக இருந்தபோது ரகசிய ஆவணங்களை ஜோ பைடன் பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக எப்.பி.ஐ. அதிகாரிகள் ஜோ பைடனின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, அமெரிக்க முதல் பெண்மணியும், ஜோ பைடனின் மனைவியுமான ஜில் பைடன் வீட்டில் இல்லை. அவர் விடுமுறை கொண்டாட்டங்களுக்காக வெளியில் சென்றிருந்ததாக தெரிகிறது.
ஜோ பைடன் வீட்டில் நடைபெற்ற சோதனையின் முடிவில், அவரது வீடு மற்றும் தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்தும் அமெரிக்காவின் துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2009 முதல் 2016 ஆண்டு வரையிலான ஆணவங்கள் என தெரிகிறது. பாரக் ஒபாமா நிர்வாகத்தில் உக்ரைன், சீனாவில் உளவுத்துறை சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஈரானின் ஏவுகணைத் திட்டம் பற்றிய முக்கியத் தகவல்கள் இந்த ஆவணங்களில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜோ பைடன் வீட்டில் சுமார் 13 மணி நேரம் அதிகாரிகள் சோதனை நடத்தியதாக வழக்கறிஞர் பாப் பாயர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, ராபர்ட் ஹூர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து அமெரிக்க அட்டர்னி ஜெனரல், மெரிக் ஹார்லென்ட் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜோ பைடன் கூறுகையில், “இந்த சோதனையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். அந்த ஆவணங்களில் எதுவும் இல்லை என்பதை விரைவில் நீங்கள் அறியத்தான் போகிறீர்கள். சட்டரீதியாக இந்த விவகாரத்தை நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.
அதேசமயம், இந்த விவகாரத்தில் ஜோ பைடன் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் வீட்டில் எப்.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.