மருத்துவம் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது: தமிமுன் அன்சாரி

மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியிருப்பது வேதனைக்குரியது என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வேதனை தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில் நடைபெற்ற இயற்கை மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதாவது:-

மருத்துவ சேவை என்பது உயர்வானது. மனிதாபிமானம் நிறைந்தது. இதில் கருணையுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவமும், மருத்துவமனைகளும், மருந்துகளும் இன்று விலை உயர்ந்ததாக மாறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு எளியவர்களுக்கு நீங்கள் கனிவுடன் பணியாற்ற வேண்டும். வணிக நோக்கமும், வருமான நோக்கமும் தவறில்லை. ஆனால் அது நோயாளிகளை சுரண்டும் விதமாக இருக்கக் கூடாது. அவர்களின் வாழ்வாதாரத்தை, வருமானத்தை பாதிப்பதாகவும் இருக்கக் கூடாது. சென்னையில்

டாக்டர் சேப்பன் அவர்கள் ஆயிரம் விளக்கு பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். அவர் இந்திய குடியரசு கட்சியின் தலைவராகவும் இருந்தார். அவரைத் தேடி வரும் நோயாளிகளுக்கு பத்து ரூபாயில் மருத்துவம் பார்த்தார். அவரது மருத்துவ சேவை உயர்வானதாக இருந்தது. சென்னை அருகே ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த ஒரு மருத்துவர் இறந்த போது, அப்பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்ததாக கருதி துடித்துப் போனதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தோம். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு நீங்கள் சேவையாற்ற வேண்டும்.

நாம் அனைவரும் இணைந்து, மக்கள் குடிபோதையில் சீரழிவதை தடுக்க வேண்டும். நான் சட்டசபையில் பணியாற்றிய போது, பூரண மதுவிலக்கை வலியுறுத்தி பலமுறை பேசியுள்ளேன் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. பண்டிகை காலங்களில் டாஸ்மாக் வருமானம் பெருகுவதை பெருமையாக கருதக்கூடாது. சென்ற பண்டிகையை விட, இந்த பண்டிகையில் கூடுதல் விற்பனை என்பது நல்ல செய்தி அல்ல. மது சமூகத்தை சீரழிக்கிறது என்பதை புரிய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.