கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ வீட்டுக்கு சென்ற கனிமொழி எம்.பி.!

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கனிமொழி எம்.பி. அங்கிருக்கும் வைகோ வீட்டுக்கும் சென்றார்.

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பூர்விகம் இல்லம் உள்ளது. இந்த வீட்டுக்கு கருணாநிதி, விஜயகாந்த் என எத்தனையோ அரசியல் தலைவர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அண்மையில் தான் வைகோ தனது பூர்விக இல்லத்தின் நூற்றாண்டு விழாவை கூட பொங்கல் பண்டிகையுடன் சேர்த்து கொண்டாடினார். இந்நிலையில் தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியன், ராஜ்யசபா எம்.பி. என்ற முறையில் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலிங்கப்பட்டிக்குள் நுழைந்ததும் அமைச்சர் மா.சுப்ரமணியனும், கனிமொழியும் நேராக வைகோவை சந்திப்பதற்காக அவரது இல்லத்துக்கு சென்றனர். ஏற்கனவே இவர்கள் வரும் தகவலறிந்த அவர் வீட்டு வாசல் வரை வந்து நின்று வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். அங்கு வைகோவின் மனைவியும் கனிமொழியை பொன்னாடை அணிவித்து வரவேற்றார். பரஸ்பர நலம் விசாரிப்புகள் முடிந்த பின்னர் சில பழைய நிகழ்வுகளை வைகோ பட்டியலிட்டுள்ளார். இதனை கனிமொழி எம்.பியும், அமைச்சர் மா.சுப்ரமணியனும் மிகுந்த ஆர்வமுடன் கேட்டறிந்தனர். இந்தச் சந்திப்பின் போது மதிமுக தலைமைக் கழகச் செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோ, மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.