ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் என 3 வகைகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர அரசுகள் கவிழும் பட்சத்திலும், கட்சி தாவல்களாலும், வேட்பாளர்கள் மறைந்தாலும் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நடத்தும் போது அவை நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் தேதியுடன் ஒத்துப்போவதில்லை. இவ்வாறு நடத்தப்படும் தேர்தல்களினால் அரசுக்கு ஏற்படும் செலவுகள் அதிகமாக உள்ள நிலையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் இந்திய சட்ட ஆணையம் கடிதம் அனுப்பி தங்களது கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை வியாபாரம் செய்வதை சட்டப்பூர்வமாக்குவதற்கு இது ஒரு தந்திரம் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அதிஷி கூறியதாவது:-
நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு பதிலாக ஜனாதிபதி முறையை கொண்டு வருவதற்காக இந்த திட்டத்தை பா.ஜ.க. முன்மொழிந்துள்ளது. இந்த தேர்தல் முறை அரசியலமைப்பு சட்டத்திற்கும், அடிப்படை ஜனநாயகத்திற்கும் எதிரானது. மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், பணபலம் கொண்ட கட்சிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி மாநிலங்களின் பிரச்சினைகளை அடக்கி ஒடுக்கும், மேலும் வாக்காளர்களின் முடிவும் பாதிக்கப்படும். ஆம் ஆத்மி கட்சி தனது பதிலை சட்ட ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. சட்ட ஆணையம் அனைத்து கட்சிகளின் கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற மற்றும் பாரபட்சமற்ற முறையில் ஆய்வு செய்யும் என்று ஆம் ஆத்மி நம்புகிறது. இவ்வாறு ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் அதிஷி தெரிவித்தார்.