பிரதமர் மோடி தொடர்பான ஒரு ஆவணப் படத்தால் நாட்டின் இறையாண்மை பாதிக்கும் என காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக ஏகே.அந்தோனியின் மகன் அறிவித்துள்ளார்.
2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளை மையமாக வைத்து ‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் பிபிசி ஊடகம் 2 தொகுதி ஆவணப் படங்களை உருவாக்கி உள்ளது. இந்த ஆவணப் படங்கள், பிரதமர் மோடிக்கு எதிராக இருக்கிறது என்பது சர்ச்சை. இதனால் பிபிசியின் ஆவணப் படங்களை மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிரிட்டனிலும் கடும் எதிர்ப்பை இது சம்பாதித்தது. இந்தியாவும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இதற்கிடையே ட்விட்டர், யூடியூப்பில் உள்ள ஆவணப்படங்களை நீக்கம் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க எதிர்க்கட்சியினர் மோடி தொடர்பான பிபிசியின் ஆவணப்படத்தை தடையை மீறி திரையிட்டு வருகின்றன. கேரளாவில் இடதுசாரிகள், காங்கிரஸ் தரப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் கேரளா முதல்வருமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவித்து இருந்தார். கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், அகில இந்திய அளவில் சமூக வலைதளம் மற்றும் டிஜிட்டர் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை ஒருங்கிணைப்பாளராக அனில் அந்தோனி கருத்து தெரிவித்து இருந்தார். இது பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இருந்தது. இதுபற்றி அவர் ‛‛பாஜகவுடன் அதிக கருத்து வேறுபாடுகள் எனக்கு உள்ளன. இருப்பினும் இந்திய நிர்வாக அமைப்புகள் பற்றி நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்ட பிபிசியின் கருத்தை ஆதரிப்பது என்பது நாட்டின் இறையாண்மையின் மதிப்பை சீர்குலைக்க செய்வது போல் இருக்கும்” என தெரிவித்து இருந்தார். இதன்மூலம் பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படத்துக்கு ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். மேலும் அவரது கருத்தை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலுத்தன. இருப்பினும் அனில் அந்தோனி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று காங்கிரஸ் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி கொள்வதாக அனில் அந்தோனி அறிவித்துள்ளார். இதுதொடர்பான கடிதத்தை அவர் கட்சி தலைவருக்கு அனுப்பி உள்ளார். மேலும் அந்த கடிதத்தை அனில் அந்தோனி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛அகில இந்திய காங்கிரஸ் மற்றும் கேரளா காங்கிரஸ் கட்சியில் எனது பொறுப்புகளில் இருந்து நான் ராஜினாமா செய்து கொள்கிறன். சகிப்புத்தன்மையற்ற பேச்சு என்பது சுதந்திரத்துக்கு எதிரானது. டுவீட்டை திரும்ப பெற கூறியதை நான் மறுத்துவிட்டேன்” என விளக்கமாக தெரிவித்துள்ளார்.
அனில் அந்தோனியின் இந்த ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர், ஒரு டாக்குமென்ட்ரி, ஆவணப்படத்தால் ஒரு நாட்டின் இறையாண்மை எப்படி பாதிக்கும்? பிபிசி ஆவணப்படத்தின் மீதான மத்திய அரசின் தடை என்பது தேவையற்றது என்றார்.