ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கு மிக்க ஒருவரை வேட்பாளராக நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது, எதிர்கட்சி போட்டியாளர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதால், ஈரோடு மாவட்டத்துக்கு மிகவும் பரிச்சயமான, அரசியல் அனுபவம் மிக்க மூத்த தலைவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை முடிவு செய்து, ஈவிகேஎஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதுவே முதல்வர் ஸ்டாலினின் விருப்பமாகவும் இருந்தது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரி, கூட்டணி கட்சித்த லைவர்களை நேரில் சந்தித்து பேசி வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகமான ஆழ்வார்போட்டையில் நேரில் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தங்களின் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் அழைத்திருக்கிறோம் என்றும் இளங்கோவன் கூறினார்.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் தனது கட்சி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளரிடம் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:-
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஏகமனதாக முடிவு எடுத்துள்ளோம். பெரியாரின் பேரனும் எனது நண்பருமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வேண்டிய உதவிகளை செய்வோம் என்றும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். அவரது குடும்பத்தில் நிகழ்ந்த துயரத்தையும் தாண்டி மக்கள் சேவை செய்வதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட களமிறங்கியுள்ளார். அவருக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம். 18 வயது பூர்த்தி அடைந்த ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ள கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.