தமிழக அரசியலில் மூத்த தலைவரும், திராவிட இயக்கப் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் திடீர் உடல்நலக் குறைவினால் நாகர்கோவில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மேடைகளில் சரமாரியாக பலரையும் விமர்சிப்பார். யாருக்கும் பயப்படவே மாட்டார். அரசியல், இலக்கிய மேடைகளையும் தாண்டி சினிமாவிலும் நடிகராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். இவரது திருமணம் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைமையில் நடந்தது. திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்று மதிமுகவைத் தொடங்கியபோது, அதில் இணைந்து மதிமுகவின் பிரச்சார பீரங்கியாக வலம்வந்தவர் நாஞ்சில் சம்பத். மதிமுகவின் முக்கிய தூண்களில் ஒன்றாக திகழ்ந்தவர். அதற்கு பிறகு, மதிமுகவில் இருந்து விலகி, அதிமுகவுக்கு சென்றார். 2012ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். தினகரன் அமமுகவை ஆரம்பித்த நிலையில் அதில் அண்ணாவும் திராவிடமும் இல்லை எனக் கூறி கட்சியில் சேரவில்லை. இறுதியில் அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துவிட்ட நாஞ்சில் சம்பத், திமுக மேடைகளில் ஐக்கியமாகிவிட்டார்.
இவருக்கு தற்போது திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு வீட்டில் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். அவரது உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், நாஞ்சில் சம்பத்திற்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை என்கிறார்கள். அதேசமயம், நாஞ்சில் சம்பத் உடலுக்கு என்ன பிரச்சினை என்பது குறித்து இதுவரை மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியிடவில்லை.