தெலுங்கானாவில் குடியரசு தின விழாவை முதல்-மந்திரி புறக்கணித்த நிலையில், அரசியல் சாசனம் மதிக்கப்படவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் வேதனை தெரிவித்து உள்ளார்.
இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இதனை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அந்தந்த மாநிலங்களில் கவர்னர்கள், மாவட்டங்களில் கவர்னர்கள் உள்ளிட்டோர் தேசிய கொடியேற்றி வைத்து வீரவணக்கங்களை செலுத்தினர். இதனை முன்னிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் ஐதராபாத்தில் உள்ள ஆளுனர் மாளிகையில் இன்று தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் மாநில மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் ஒருமுறை கூறும்போது, ஒரு பிரிவினர் மட்டும் அனைத்து வித சலுகைகளையும் பெற்று கொள்வதும், மற்றொரு பிரிவினர் அனைத்து பாரங்களையும் சுமந்து செல்லும் நிலை கூடாது என கூறினார். தேச கட்டமைப்பே நாட்டின் வளர்ச்சிக்கான விசயங்கள் ஆகும். புதிது புதிதாக உருவாகும் கட்டிடங்கள் அல்ல. அனைத்து விவசாயிகளும் மற்றும் விளிம்பு நிலையில் உள்ள மக்களும், பண்ணைகள் மற்றும் வீடுகளை வைத்திருக்க வேண்டும். இதுதவிர்த்து, ஒரு சிலரிடம் மட்டுமே விவசாய பண்ணைகள் இருப்பது கூடாது. அது வளர்ச்சி அல்ல. வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் சம பங்கு இருக்க வேண்டும் என தனது உரையின்போது தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்ததராஜன் கூறியுள்ளார்.
குடியரசு தின விழா நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தெலுங்கானா அரசு புதிதாக புறக்கணித்தால் பரவாயில்லை. புறக்கணிக்கிறது என்பது அங்கு சாதாரணமாகவே.. வழக்கமாகவே ஆகிவிட்டது. எனக்கு இது புதுமையாக தெரியவில்லை. அரசியல் அமைப்பு சட்டத்தை தந்த அம்பேத்கர் அவர்கள் யாருடைய உரிமை மறுக்கப்பட்டாலும் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று உரிமையை பெறுவதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் உரிமை உள்ளது என்று சொல்லி இருக்கிறார். தெலுங்கானா அரசு குடியரசு தின விழாவை நிச்சயமாகவே குறைத்து மதிப்பிட்டு அரசாங்க விழாவாக நடத்தாமல் அரசாங்கத்தில் இருந்து எந்த அறிவிப்பும் வராமல் அவர்களும் கொடியேற்ற நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். பொதுமக்களில் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றதால் உயர் நீதிமன்றம் மிகக்டுமையான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. புதுச்சேரியில் செய்தது போல கலைஞர்கள் பங்களிப்பு இருக்க வேண்டும். குழந்தைகள் பங்களிப்பு இருக்க வேண்டும். பொதுமக்கள் பங்களிப்பு இருக்க வேண்டும் ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளே கொடுத்துள்ளனர். ஆனால், அதை அவர்கள் பின்பற்றவில்லை என்பதுதான் பொது நல வழக்கு போட்டவருடைய எண்ணம்.
இதை நீதிமன்றம் எடுத்துக்கொண்டு கண்டனத்தை தெரிவித்து முழுமையாக நடத்த வேண்டும் என்ற உத்தரவை கொடுத்தது. ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அரசாங்கம் செய்ய முடியல என சொல்லிவிட்டனர். என்னால் தேசியக்கொடிக்கு என்ன மரியாதை செய்ய முடியுமோ அதை செய்துவிட்டு சிறப்பாக செயலாற்றிய 6 பேருக்கு விருது கொடுத்தேன். தெலுங்கானாவில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை ஏன் ஆளுநர் மாளிகையில் நடத்த சொன்னீர்கள் என்று நீங்களே கேளுங்கள். நீதிமன்றமும் அதைத்தான் கேட்டுள்ளது. நான் என்ன செய்வது. தெலுங்கானாவில் நடைபெற்றது சட்ட மீறல், மரபு மீறல், அரசியல் அமைப்பு சட்ட மீறல் என அனைத்தும் தான் நடைபெற்றுள்ளது.
தெலுங்கானாவில் விதி மீறல் இருக்கு.. ஆனால் அதை இங்கே உள்ள சில பத்திரிகைகள் சந்தோசமாக எழுதுறாங்க.. அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை அவர்கள் மீறுகிறார்கள். அது இங்கே உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? அரசியல் அமைப்பு சட்டத்தின்படி குடியரசு தினம் கொண்டாடப்பட வேண்டும். கொண்டாடப்படவில்லை என்றால் அதை தவறு என்று எண்ணாமல் அதை குடியரசுதினம் கொண்டாடப்படுவது இல்லை என்பதை கொண்டாடினால் நான் என்ன செய்வது. எல்லா அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளது. ஆளுநர்கள் அதிகாரத்தை பயன்படுத்தினால் உடனே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஆளுநர் அதிகாரம் செலுத்துகிறார் என்று நீங்கள்தான் சொல்கிறீர்கள்.. அதிகாரத்தை பயன்படுத்தவில்லை என்றால் பயன்படுத்தவில்லை என்று சொல்கிறார்கள்..தெலுங்கானா மக்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர்.
மத்திய அரசை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்து ஆளுநரை அவர் எதிர்க்கிறார். அதனால், எனக்கு இதைப்பற்றி கவலை இல்லை. ஆளுநர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று கேட்கிறார்களே தவிர முதல்வர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று ஏன் கேட்க மறுக்கிறார்கள். தெலுங்கானா அரசு நடந்துகொண்ட விதம் குறித்து மத்திய அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசுக்கு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப வேண்டும். அதன்படி அறிக்கை அனுப்பி வருகிறேன். அதிகாரிகள் மீது தனி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றால் நானே எடுக்கலாம். ஆனால் அவர்களின் வருங்காலம் பாதிக்கப்படும். அதிகாரிகள் மீது பிளாக் மார்க் வரக்கூடாது என்பதால் நான் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஏனெனில் அவர்களாக வராமல் இல்லை. அவர்களுக்கு அறிவுறுத்தல் வருகிறது. அதனால் வராமல் இருக்கிறார்கள். இன்னொருவருடைய வாழ்க்கையை கெடுக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.