தெலங்கானாவில் தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை: முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணிப்பு!

நாட்டின் 74வது குடியரசு தினவிழாவையொட்டி தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் இன்று ராஜ்பவனில் தேசியக்கொடி ஏற்றினார். இதனை தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.

நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் அரசு சார்பில் ஆளுநர் கொடியேற்றும் குடியரசு தினவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இன்று ராஜ்பவனில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடியை ஏற்றினார். இந்த விழாவை முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் புறக்கணித்தனர். இதனால் தெலங்கானாவில் முதல்வர், ஆளுநர் இடையேயான மோதல் தொடர்ந்து முற்றி வருகிறது.

தற்போதைய சூழலில் பாஜக ஆளாதா மாநிலங்களின் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. டெல்லி, கேரளா, தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல்வர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக தெலங்கானாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கும், அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவுக்கும் இடையே நாள்தோறும் மோதல் போக்கு என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழிசை சவுந்தரராஜனை தொடர்ந்து சந்திரசேகரராவ் புறக்கணித்து வருகிறார்.

தெலங்கானாவை பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் செகந்திராபாத்தில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் குடியரசு தினவிழா நடக்கும். இதில் ஆளுநராக இருப்பவர் கொடியேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இதில் முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பார்கள். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2022ல் குடியரசு தினவிழாவை மாநில அரசு ரத்து செய்தது. இந்த ஆண்டும் கூட முதல்வர்-ஆளுநர் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் கொரோனா பாதிப்பை காரணம் காட்டி குடியரசு தினவிழா ரத்து செய்வதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு ஆளுநரை தவிர்ப்பதற்காகவே விழாவை ரத்து செய்கிறது என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கிடையே தான் தெலங்கானா அரசின் முடிவுக்கு எதிராக நேற்று ஹைதரபாத் உயர்நீதிமன்றத்தில் சீனிவாஸ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கொரோனா பரவல் இல்லாத நிலையில் காழ்ப்புணர்ச்சியல் குடியரசு தினவிழா ரத்து செய்யப்படுகிறது என கூறப்பட்டு இருந்தது. இதனை உடனடியாக விசாரணைக்கு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு, குடியரசு தினவிழாவை நடத்தியே ஆக வேண்டும் என தெலங்கானா அரசுக்கு உத்தரவிட்டது.

இது சந்திரசேகர ராவ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ராஜ்பவனில் குடியரசு தினவிழாவை தனியாக நடத்தலாம் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசு சார்பில் தகவல் அனுப்பப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் அவசரஅவசரமாக மேற்கொள்ளப்பட்டது. அம்மாநில தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் மேற்பார்வை செய்தனர். இதையடுத்து இன்று நாட்டின் 74வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ராஜ்பவனில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். இதில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கவில்லை. மாறாக உயர் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.