ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று அந்நாட்டின் ஆட்சியாளர்களான தலிபான்களை ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-
கல்வி பயில்வதைத் தடுக்கும் அனைத்து பாரபட்சமான சட்டங்களையும், நடைமுறைகளையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் இது. குறிப்பாக ஆப்கனிஸ்தானில் இடைநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்பதற்காக விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த ஆண்டுக்கான சர்வதேச கல்வி நாளின் கருப்பொருள், கல்விக்கு முன்னுரிமை கொடுங்கள் என்பதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டுஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின் படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையை போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் சுமார் 80 சதவீத சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.