குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களால் பல லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். குறிப்பாகப் புகையிலையை எடுத்துக் கொள்வதால் கேன்சர் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே இந்தியாவில் புகையிலை பொருட்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்தவும் இங்குத் தடை உள்ளன. இருப்பினும், புகையிலை பொருட்களின் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்படவில்லை. இதற்கிடையே தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்குத் தடை விதித்துக் கடந்த 2006இல் உத்தரவிடப்பட்டது. உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் இந்த உத்தரவைப் பிறப்பித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் இது தொடர்பான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வந்தது. இந்த விதிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.
இந்தச் சூழலில் இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சமீபத்தில் தான் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலை உணவுப் பொருளாகக் குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரத் தடை சட்டத்தில் அதன் விளம்பரங்களுக்கு மட்டுமே தடை இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வதாக உத்தரவிட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்கள் மீண்டும் தமிழகத்தில் கிடைக்கும் சூழல் உருவானது.
இதனிடையே அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 3.65 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட தொற்று நோய் சிகிச்சைக்கான புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, தலா ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட அளக்குடி மற்றும் கோமல் கிராமத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் குடியிருப்புகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.46.50 கோடி மதிப்பில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டுமான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் இது தொடர்பாகச் செய்தியாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “தமிழ்நாட்டில் குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு நிச்சயம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.. கொரோனாவுக்கு பிறகு இப்போது மாரடைப்புகள் அதிகரித்துள்ளது. அனைவரும் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்றால்.. அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.