ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்: அன்புமணி

பிபிசி வெளியிட்டு இருக்கும் மோடி குறித்த ஆவணப் படம் இந்திய சட்டங்களுக்கு உட்பட்டே இருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் பாமக நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தருமபுரியில் முதன்மை பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை உள்ளது. அடுத்து பாசனத் திட்டம் பிரச்சனையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக மனிதர்களின் உடலில் இருக்கும் எழும்பு, பல் போன்றவற்றின் வளர்ச்சி மற்றும் வலிமை பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளை உருவாக்கும் ப்ளூரோசிஸ் என்ற பாதிப்பு குடிநீர் மூலம் ஏற்படுகிறது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீரில் புளோரை என்ற நச்சுப்பொருள் கலந்து இருக்கிறது. இதனை தடுக்க பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனாலும், இந்த திட்டத்தின் மூலமாக இரண்டு மாவட்ட மக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்கப்படவில்லை. கிராமங்களில் ஒக்கேனக்கல் கூட்டுக் குடிநீரையும் உள்ளூரில் இருக்கும் நிலத்தடி நீரையும் கலந்து விநியோகிக்கிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கனமழை பெய்யும்போது 500 டிஎம்சி உபரிநீர் காவிரி ஆற்றின் வழியே சென்று கடலில் வீணாக கலந்து வருகிறது. நீரேற்றும் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 3 டிஎம்சி தண்ணீர் மாவட்ட நீர்நிலையில் நிறைத்து வேளாண் தொழிலின் முன்னேற்றத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நாம் கோரி வருகிறோம்.

குடியரசு தின விழாவில் சென்னையில் கள்ளச்சாரத்தை ஒழித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதிகளை வழங்கி கவுரவித்தார். அதே தினத்தில் கரூரில் மது விற்பனை சிறப்பாக நடைபெறுவதற்கு காரணமாக இருந்த அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். திராவிட மாடல் ஆட்சி என்பது மதுவை சார்ந்து இயங்குவது தானா? மது தொடர்பாக திமுக அரசின் நிலைபாடு என்ன என்று தெளிவுபடுத்திட வேண்டும். போதை பொருள் ஒழிப்பு பிரிவில் 20 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும்.

பாமகவுக்கு இடைத் தேர்தல் மீது நம்பிக்கை இல்லை. இடைத் தேர்தல்கள் அவசியமில்லை என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலுக்கு பிறகு எந்த இடைத் தேர்தலிலும் பாமக போட்டியிடவில்லை. பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தில் தவறான காட்சிகள் வருவதாக பாஜக கூறுகிறது. எந்த படத்தை வெளியிட்டாலும் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதாகவே இருந்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.