பாதுகாப்பு குளறுபடி காரணாமாக நிறுத்தி வைக்கப்பட்ட ராகுல் யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. ராகுல் காந்தியின் யாத்திரையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கலந்து கொண்டார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி ராகுல் காந்தி துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது. அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார்.
இந்தநிலையில் பாதயாத்திரையை மீண்டு துவங்கிய ராகுல் காந்தியுடன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி நேற்று கலந்து கொண்டார். இது பாஜகவிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பாஜகவுடன் கூட்டணி வைத்துதான் மெஹ்பூபா முப்தி காஷ்மீரில் ஆட்சியமைத்தார் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் யாத்திரையின் கடைசி நாளில் கலந்து கொள்ள 21 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்பது போன்றதாக உள்ளது என மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு பிறகு இன்று (ஜனவரி 28) தான் முதல் முறையாக மக்கள் அதிக அளவில் வீட்டைவிட்டு வெளியே வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராகுலுடன் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக டுவிட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ல் அரசியலமைப்பின் 370-ஆவது விதியின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது. தற்போது ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் காற்றாக வந்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக அளவிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் முதல் முறையாக தங்களது வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். ராகுல் காந்தியுடன் ஒற்றுமைப் பயணத்தில் கலந்துகொண்டு நடந்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.