மத்திய பிரதேசத்தில் இரண்டு போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு போர் விமானம் விபத்துக்குளானது.
சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே விபத்துக்குள்ளானது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பயிற்சி நடந்து கொண்டிருந்த குவாலியர் விமான தளத்தில் இருந்து இரண்டு விமானங்களும் புறப்பட்டன. அடர் பனிமூட்டம் காரணமாக இரு விமானங்களும் இன்று அதிகாலையில் விபத்துக்குள்ளானதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இரண்டு போர் விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதா இல்லை வேறு காரணங்களால் விபத்து நடந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகோய் 30 விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பாராசூட் மூலம் பத்திரமாக இறங்கியதாக கூறப்படுகிறது. மற்றொரு விமானி தேடப்பட்ட நிலையில் அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மிராஜ் 2000 போர் விமானத்தில் இருந்த ஒருவரை மட்டும் தேடும் பணி நடப்பதாக விமானப் படை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு இந்திய விமானப் படைத் தளபதி விளக்கியுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் விமானப் படைக்கு சொந்தமான மேலும் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி. ஷ்யாம் சிங் , “பரத்பூரில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதனைச் சுற்றி பயங்கரமாக நெருப்பு எரிவதால் அது பாதுகாப்புப் படையைச் சேர்ந்ததா இல்லை தனியார் விமானமா என்று தெரியவில்லை. விமானத்திலிருந்து பைலட் தப்பியிருக்கலாம் என்றே கருதுகிறோம். அவரையும் தேடி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.