பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் காவல் நிலையம் அருகே உள்ள மசூதியில் இன்று பிற்பகல் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. மனித வெடிகுண்டாக வந்த நபர், மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மசூதியில் தொழுகையின்போது முன் வரிசையில் இருந்த நபரின் மூலம் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அப்போது மசூதியில் 220க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தற்கொலைப்படையின் இந்த கொடூர செயலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கட்டிடடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. மீட்பு பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பெஷாவர் கமிஷனர் ரியாஸ் மெஹ்சூத், 28 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறினார். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதால் பலி என்ணிக்கை உயரக்கூடும். தொடர்ந்து மசூதிக்குள் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார்.
இந்நிலையில், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.