தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்: விஜயகாந்த்

தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதித்த தடையை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில், குட்கா உள்ளிட்ட போதை பொருட்களுக்கான தடை ரத்து செய்திருப்பது போதை பழக்கத்திற்கு மேலும் பல இளைஞர்கள் அடிமையாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்து உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டிக்க வேண்டும். தமிழகத்தில் நிலவும் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். போதைப் பொருட்கள் இல்லா மாநிலம் என்ற நிலையை தமிழகம் அடைந்திட வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.