சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் சொந்த பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அகற்றிய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்ததற்கு மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலை கழகம் என்ற பெரியார் அமைப்பில் இணைந்து பணியாற்றுபவர் இளங்கோவன். கோட்டையூர் உதயம் நகரில் இளங்கோவன் புதியதாக வீடு ஒன்றை கட்டி உள்ளார். இந்த வீட்டின் மதில் சுவரின் உட்புறமாக மார்பளவு தந்தை பெரியார் சிலையை இளங்கோவன் அமைத்துள்ளார். இளங்கோவனின் புதிய வீடு மற்றும் தந்தை பெரியார் சிலை ஆகியவை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறக்கப்படும் என்றும் இதில் கொளத்தூர் மணி பங்கேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் அனுமதி இல்லாமல் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதாக கூறி அரசு அதிகாரிகள், போலீசார் துணையுடன் இந்த பெரியார் சிலையை அகற்றினர். மேலும் அகற்றப்பட்ட பெரியார் சிலையை சரக்கு வாகனத்தில் ஏற்றி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக தந்தை பெரியார் சிலையை வைத்த இளங்கோவன் கூறுகையில், பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் நான் பணியாற்றுகிறேன். வங்கியில் கடன் பெற்று புதியதாக வீடு கட்டி உள்ளேன். சொந்த பட்டா நிலத்தில் பெரியார் சிலை வைக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. தருமபுரியை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்தது என்றார்.
ஆனால் போலீஸ் தரப்போ, உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை; உரிய அனுமதியும் பெறவில்லை. ஆகையால் பெரியார் சிலையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என கூறினர். இதனைத் தொடர்ந்து பெரியார் சிலை அகற்றப்பட்ட இடத்தில், தந்தை பெரியார் சிலையை சட்டவிரோதமாக வருவாய்த்துறை, காவல்துறை அகற்றியது என்கிற பதாகை வைக்கப்பட்டது. இதனை நேற்று கொளத்தூர் மணி அவரது ஆதரவாளர்களுடன் திறந்து வைத்தார். திமுக ஆட்சியில் பெரியார் சிலை அகற்றமா? என சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன. இதனடிப்படையில் காரைக்குடி தாசில்தார் கண்ணன், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) கணேஷ்குமார் ஆகியோரை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நேற்று உத்தரவிட்டது. காரைக்குடி தாசில்தார் கண்ணனை சிவகங்கை வனத்திட்ட அலுவலராக இடம் மாற்றம் செய்யப்பட்டார். துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார், சென்னை தலைமை அலுவலகத்தில் கட்டாய காத்திருப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டதை மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா கண்டித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா தமது டுவிட்டர் பக்கத்தில், காரைக்குடி அருகில் கோட்டையூர் உதயம் நகரில் யாரோ இளங்கோவன் என்கின்ற திக காரர் அனுமதியின்றி ஈவெரா சிலை வைத்த காரணத்தால் அது நிர்வாகத்தால் எடுக்கப்பட்டுள்ளது. நியாயமாக நடந்து கொண்ட அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கத்தோடு அரசு அதிகாரிகளை மாற்றி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பதிவிட்டுள்ளார்.