திமுக ஆட்சியிலும் ஜாதி தீண்டாமை தொடருதே: பா.ரஞ்சித்

கோவிலுக்குள் நுழைந்த தலித் இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், திமுக ஆட்சியிலும் சமூக அநீதி தொடர்வதாக இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

சேலம் திருமலைகிரி பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்கிற இளைஞர் உயர் சாதியினர் விதித்த தடையை மீறி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததற்காக தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் டி.மாணிக்கத்தை தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன்.

இதனை அடுத்து பிரவீன் குமார் இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த மனுவில், “நான் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். நான் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறேன். எங்கள் ஊரில் அரசுக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. அதற்கு ஊர் மக்கள் சார்பில் திருவிழாவிற்கான ஏற்பாடு நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த 26/01/2023 அன்று இரவு 8:30 மணியளவில் அந்த மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வெளியே வந்த போது அங்கே அமர்ந்திருந்த வெங்கடாசலம் மற்றும் கூலைகவுண்டர் என்று அழைக்கப்படும் இருவரும் என்னை பார்த்து நீ ஏன்டா கோவிலுக்குள் சென்றாய், நீங்கள் எல்லாம் உள்ளே வரக்கூடாது என்றும் கூறி அடிக்க வந்தனர். மேலும் உன்னை காலையில் பார்த்துக் கொள்கிறோம் என்று மிரட்டினார்கள்.

அதன்பின் 27/01/2023 அன்று காலை சுமார் 8:30 மணியளவில் பெரிய மாரியம்மன் கோவில் வாசாலுக்கு திமுகவை சேர்ந்த ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் என்னை அழைத்து வரச் சொன்னதாக கூறி எங்கள் ஊரை சேர்ந்த சிலர் அழைத்துச் சென்றனர். பெரிய மாரியம்மன் கோவில் வாசலில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இருந்தனர். என்னை பார்த்த உடன் அங்கே இருந்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி, உன்னை யாருடா கோவிலுக்குள் போகச் சொன்னது. மேளம் அடிக்கும் நாய்கள் நீங்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என்று திட்டி என் நெஞ்சில் தாக்கினார். அப்போது வெங்கடாசலம் என்பவர் இந்த கீழ் சாதி பையன்கிட்ட நானே வரக்கூடாது என்று கூறியும் மீண்டும் திமிராக கோவிலுக்குள் வருகிறான். இவனை சும்மா விடக்கூடாது என்று மிரட்டினார்.

அதன்பின் என் பெற்றோர்களும் நானும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்சினோம். அதன் பின் வெங்கடாசலம், மாணிக்கம் உள்ளிட்டவர்கள் என்னை இனி கோவிலுக்குள் நுழைந்தால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டினார்கள். அதன்பின் அவர்களிடம் இருந்து உயிர் பிழைத்து வந்தேன். சாதியை காரணமாக வைத்து அரசுக்கு சொந்தமான கோவிலில் என்னையும் என் சாதி சமூகத்தையும் நுழையக்கூடாது என்று மிரட்டியும் கொலை மிரட்டல் விடுத்த திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், வெங்கடாசலம், கூலைகவுண்டர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதனை அடுத்து சேலம் இரும்பாலை காவல்நிலைய போலீசார் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டு இருக்கும் இயக்குநர் பா.ரஞ்சித், “பெரியார், அண்ணா முன் வைத்த பிராமண & சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன? உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத, சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி! நீதி கட்சி தொடங்கி இன்று வரையிலான தமிழ்நாடு கட்சிகளின் அரசியல் என்பது, அரசியல் மற்றும் அதிகார மாற்றத்திற்கா? சமூக மாற்றத்திற்கா? ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்கு கோயில் திறப்பு! ஒரு பக்கம் பட்டியலின இளைஞன் கோயில் நுழைவு பெரூம் குற்றம்! தொடரும் தீண்டாமை கொடுமைகள்?” என்று பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மக்களின் முன்பு பட்டப்பகலில் பொதுவெளியில் தலித் இளைஞரை நிக்க வைத்து வன்கொடுமை செய்வது தான் திமுக அரசியல் பணியா? இவர்கள் தான் சமூகநீதி பயணத்தில் மக்களுக்கு துணை நிற்பவர்களா? புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம் அனைத்திலும் கோவில் தீண்டாமை பிரச்சினை. இது தான் தமிழ்நாடு!# கொடுங்கோல்ஆட்சி” என்று விமர்சித்துள்ளது.