சென்னையிலிருந்து வேலூருக்கு சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயண நேரத்திலும் ஓய்வின்றி ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரிடம் டிஸ்கஷன் செய்தவாறே பயணித்தார்.
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை இன்று வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் 2 நாட்கள் வேலூரில் தங்கி மண்டல அளவினான ஆய்வுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை சீரடி எக்ஸ்பிரஸில் பயணித்த முதல்வர் ஸ்டாலின், பயண நேரமான 2 மணி நேரமும் முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு அது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். ரயில் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் செய்துகொண்டே பயணித்திருக்கிறார். அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் முதல்வருடன் இந்த பயணத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். கோப்புக்களை மட்டும் வைத்துக் கொண்டே இவ்வளவு கேள்விகள் கேட்ட முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வின் போது இன்னும் என்னென்ன வினாக்களை முன் வைப்பாரோ என வேலூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தனது ரயில் பயணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், ”கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதிசெய்யும் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தினைச் செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன். தொடர்வண்டியிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து, பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது!” என்று அவர் கூறியிருக்கிறார்.