எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு: டாக்டர் கிருஷ்ணசாமி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிப்பது என முடிவு எடுத்துள்ளோம் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

வரும் எம்பி தேர்தலில், எடப்பாடி பழனிசாமி களமிறங்கும் சூழலில், அவருக்காக ஆதரவுகளை கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில், புதிய தமிழகம் கட்சியும் தன்னுடைய ஆதரவை கூறி, எடப்பாடியின் கரங்களை மேலும் பலப்படுத்தி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு எங்களது முழு ஆதரவினை அளிக்கின்றோம். 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் 521 வாக்குறுதிகளை திமுக கொடுத்து மக்களின் வாக்குகளை பெற்று குறைந்த பெருபான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. நாளுக்கு நாள் திமுகவுக்கு மக்களின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இந்த நேரத்தில் அவர்களுக்கு தக்கப்பதிலடி கொடுக்க வேண்டுமென்றால் அது எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். அதனால் அதிமுகவுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்ய உள்ளோம். அதற்காக புதிய தமிழகம் கட்சி சார்பில் பணிக்குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘முற்போக்கு” என பெயர் போடுவதால் எந்த வித்தியாசமும் கிடையாது. நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம். பாஜக விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள் என நினைக்கிறேன். அவர்கள் மாறுப்பட்டு போவார்கள் என்று நான் நினைக்கவில்லை. எல்லாரும் ஒத்தக்கருத்துடன் இருக்கிறோம். அதனால், எதிர்க்கட்சிகள் இணைந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். ஈரோடு கிழக்கில் புதிய தமிழகம் கட்சிக்கு 10% வாக்குகள் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.