மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும்: வேல்முருகன்

மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மக்கள் இலவசத்திற்கு கையேந்தும் நிலையும் இலவசத்தின் பெயரால் தொடரும் மரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு, தனியார் நிறுவனம் சார்பில் நடந்த இலவச வேட்டி- சேலைகள் வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. காவல்துறை கண்காணிப்பு முன் அனுமதி பெற்று இந்த இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டிருந்தாலும், ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டும் மக்கள் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். மக்கள் வரிசையில் செல்ல தடுப்புகளும், உரிய பாதுகாப்பும் இருக்கிறதா என காவல்துறை கண்காணித்த பிறகே, இந்நிகழ்ச்சியை நடத்திருக்க வேண்டும். எனவே, எதிர் வரும் காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எந்த நலத்திட்ட நிகழ்ச்சி என்றாலும், அதனை யார் நடத்தினாலும், அரசிடம் தெரியப்படுத்தி முறையான அனுமதி பெற வேண்டும்.

வாணியம்பாடியில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க தமிழ்நாடு அரசு முன் வர வேண்டும். இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த 4 பெண்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.