தெற்கு துருக்கியில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு அதிக அளவில் உயிர் சேதமும் பொருட் சேதமும் எற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள ‘கோய்’ நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. ஏராளமானோர் உயிரிழந்தனர். துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் கடந்த வாரம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் நூர்தாகி அருகே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 9 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி – சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள் கட்டிடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் பலரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 140க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சரிந்துள்ள நிலையில், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடரும் நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. பயங்கர நிலநடுக்கம் காரணமாக துருக்கியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டுள்ளது.