எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை: ஜெயக்குமார்

எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் சந்திக்க வாய்ப்பே இல்லை என இபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் இன்று நிறைவடைந்தது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்போம் என்றும் என்றும் கூறியுள்ளனர். இதனிடையே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், அதிமுகவின் இரட்டை இலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விட்டுக்கொடுப்பதாக கூறினார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலைக்காக வாக்கு சேகரிப்போம் என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையனுக்கு நன்றி என்று கூறினார். இதனிடையே ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் சந்திப்பார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று கூறினார்.

இதனிடையே இன்று தேர்தல் அதிகாரியை சந்தித்த ஜெயக்குமார், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருவதாக புகார் கொடுத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரிடம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு நிகழுமா என்று கேட்டனர். அதற்கு வாய்ப்பே இல்லை என்று ஜெயக்குமார் கூறினார். கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று கூறக்கூடாது. திமுகவின் பி டீம் போல ஓ.பன்னீர் செல்வம் செயல்படுவதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.