சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி நியமிக்கப்படுவதால் சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜனவரி 17 ஆம் தேதியன்று பரிந்துரைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணியான மகிளா மோர்ச்சா அமைப்பில் நிர்வாகியாக உள்ள இவர், மத வெறியை தூண்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நடத்துகின்ற கூட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இஸ்லாமிய, கிருத்துவ மதங்களுக்கு எதிராக விக்டோரியா கௌரி பேசி இருப்பதை குறிப்பிட்டு, சிறுபான்மை சமூகத்தின் மீது இத்தகைய வெறுப்புணர்வைக் கொண்டிருக்கும் ஒருவருக்கு கொலிஜியம் பரிந்துரைத்து இருப்பது கவலை அளிக்கிறது என்றும், பரிந்துரையை திரும்பப் பெற வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் குடியரசு தலைவருக்கும், கொலிஜியத்தின் உறுப்பினர்கள் மூவருக்கும் தனித்தனியாகவும் கடிதம் அனுப்பி உள்ளார்கள். ஒரு அமைப்பின் சித்தாந்த பின்புலத்தில் இருந்து கொண்டு மற்ற மதங்களை இழிவாகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசி வரும் ஒருவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அரசியலமைப்பின் நோக்கங்களுக்கு அது எதிரானதாக அமையும் என்றும் மூத்த வழக்கறிஞர்களும், நான் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறோம்.
இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டால் சிறுபான்மையினருக்கு உரிய நீதி எப்படி கிடைக்கும்? என்பது தான் அனைவரின் கேள்வியாக இருக்கின்றது. தங்கள் தலைமையிலான தி.மு.க அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து சிறுபான்மையினருக்கு காவல் அரணாகவும், சமூக நீதியை பாதுகாக்கும் வகையிலும் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகின்றது. விக்டோரியா கௌரி அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால், சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறியாகி விடும். ஆகவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இந்த விவகாரத்தில் தலையிட்டு, விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற, கொலிஜியம் உள்ளிட்ட உரிய அதிகார அமைப்புகளை வலியுறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கலைஞருக்கு நினைவாக பேனா நினைவுச் சின்னம் அமைப்பதில் எந்த தவறும் இல்லை. கலைஞர் எழுதிய சங்க தமிழின் அடையாளம் தான் பேனா. அவர் தீட்டிய குறளோவியம் தான் அந்த பேனா. அவர் எழுதிய தொல்காப்பிய பூங்கா தான் அந்த பேனா. எனவே பேனாவை சின்னமாக வைப்பது தவறில்லை. பட்டேலுக்கு சிலை வைக்கும் போது எதிர்ப்பு காட்டாதவர்கள் இப்போது எதிர்ப்பு காட்டுவது ஆத்திரத்திலும் எரிச்சலிலும் காட்டுவதாகும். இவ்வாறு அவர் கூறினார்.