அதிமுகவை பாஜக விழுங்கவோ அல்லது கரைக்கவோ செய்யும் என காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் வேட்பாளர்களை வாபஸ் பெற்றதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். அதிமுக பேனர்களில் எம்.ஜி.ஆர். படத்தையும், ஜெயலலிதா படத்தையும் அகற்றிவிட்டு மோடி படத்தையும், அமித்ஷா படத்தையும் போட்டுக் கொள்வது தான் அக்கட்சிக்கு உத்தமம் என்று கூறியுள்ள செல்வப்பெருந்தகை, இப்படியே போனால் அதிமுகவை பாஜக விழுங்கவோ அல்லது கரைக்கவோ செய்யும் என எச்சரிக்கவும் செய்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலை மையமாக வைத்து ஆர்.எஸ்.எஸ். தனது சித்துவிளையாட்டை அரங்கேற்றியிருப்பதாக செல்வப் பெருந்தகை சாடினார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தக் கட்சிகளின் நிலையை உணர வேண்டும் என்று கூறிய அவர், வட கிழக்கு மாநிலங்களில் பல கட்சிகளை பாஜக விழுங்கியிருப்பதாகவும் மஹாராஷ்டிராவில் கூட்டணிக் கட்சியான சிவசேனாவையே விழுங்கி விட்டதாகவும் தெரிவித்தார். அதேபோல் பீகாரில் ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை பாஜக விழுங்க பார்த்ததாகவும், ஆனால் நிதிஷ்குமார் விழித்துக் கொண்டு கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டார் எனவும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தான் தாம் தற்போது இருப்பதாகவும் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் எல்லாம் மிகச்சிறப்பான வரவேற்பு கிடைப்பதாகவும் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கிறார்.