ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பெரும் களேபரங்களுக்கு நடுவே அதிமுகவின் தென்னரசு, இரட்டை சிலை சின்னத்தில் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இன்று ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தாம் இலங்கை பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறுகையில், இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அந்நாட்டுக்கு செல்கிறார். இலங்கை அரசியல் கட்சிகளின் அழைப்பின் பேரில் நான் இலங்கைக்கு செல்கிறேன். இத்தகைய பயணங்களால் நமது இந்திய மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தமக்கு பதில் மூத்த பாஜக தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். அத்துடன், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறைந்துள்ளன; இலங்கை- இந்தியா இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றார் அண்ணாமலை.