பிரிட்டனுக்கு உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி திடீா் பயணம் மேற்கொண்டாா். ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு அவா் அந்த நாட்டுக்கு வந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, 3 நாள் பயணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் சென்றுள்ளார். இங்கிலாந்தில் பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசிய பின்னர், அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் கூட்டத்தில் ஜெலன்ஸ்கி பேசினார். தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்ற அவர், அங்கு பிரான்ஸ் பிரதமர் மாக்ரன் மற்றும் ஜெர்மன் பிரதமர் ஒலாப் ஷோல்சையும் சந்தித்தார். உக்ரைனுக்கு உடனடியாக போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் தேவை என்று 3 நாடுகளின் தலைவர்களிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதல் துவங்கி ஓராண்டு நிறைவடையவுள்ளது. போர் துவங்கிய பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, எந்த வெளிநாட்டு பயணமும் மேற்கொள்ளவில்லை. தற்போது முதன் முறையாக நேற்று இங்கிலாந்து நாட்டுக்கு திடீரென பயணம் மேற்கொண்ட அவர், தொடர்ந்து பிரான்சுக்கும் சென்றுள்ளார். அவரது இந்த பயணம், அவர் புறப்படும் வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.
இந்திய நேரப்படி நேற்று மாலை இங்கிலாந்தின் தலைநகர் லண்டனை அடைந்த அவர், முதல் நிகழ்ச்சியாக பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார். ‘போர் துவங்கியது முதல் தற்போது வரை இங்கிலாந்து, உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது. மேலும் அவ்வப்போது ஆயுதங்களையும் அனுப்பி வருகிறது. இங்கிலாந்து அரசின் இந்த உதவிக்கு உக்ரைன் என்றும் கடமைப்பட்டுள்ளது’ என்று பிரதமர் ரிஷி சுனக்கிடம், ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். இருப்பினும் தற்போது ரஷ்ய தாக்குதலை எதிர்கொள்ள தேவையான போர் விமானங்கள், பீரங்கிகள் உக்ரைன் வசம் இல்லை என்று தெரிவித்த அவர், உடனடியாக போர் விமானங்களையும், சக்தி வாய்ந்த பீரங்கிகளையும் கொடுத்து இங்கிலாந்து அரசு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரைன் அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ரிஷி சுனக், உடனடியாக செய்ய முடிந்த அனைத்தையும் இங்கிலாந்து அரசு செய்யும் என்று உறுதியளித்துள்ளார். தொடர்ந்து லண்டனின் புகழ்பெற்ற டவுனிங் ஸ்ட்ரீட்டில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஹாலில் இங்கிலாந்தின் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் முன்பு ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரம் வெற்றி பெறும். ரஷ்யா தோல்வியடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஏனெனில் வரலாற்று புகழ் மிக்க இந்த வெற்றியில் இங்கிலாந்து எங்களுக்கு பெரிதும் துணை நிற்கிறது. அதற்காக நான் மீண்டும் மீண்டும் உக்ரைன் மக்கள் சார்பில் இங்கிலாந்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடைசியாக நான் இங்கிலாந்துக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் 2020ம் ஆண்டு துவக்கத்தில் வந்தேன். அப்போது இங்கிலாந்து பிரதமர் எனக்கு தேநீர் விருந்து கொடுத்தார். அந்த தேநீரின் சுவை, இன்றும் மறக்க முடியாததாக இருக்கிறது. போர் துவங்கியதும் இங்கிலாந்தின் அப்போதைய பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனின் உதவிகள் என்றுமே மறக்க முடியாதவை. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய மற்றும் நடுநிலை நாடுகளை ஒருங்கிணைப்பதில் அவர் வெற்றிகரமாக செயலாற்றினார். அவரது இந்த நடவடிக்கை ஒரு சமயத்தில் சாதிக்க முடியாத ஒன்றாக தோன்றியது. அதை அவர் சாதித்துக் காட்டினார். அவருக்கும் எங்கள் மேலான நன்றிகளை தெரிவிக்கிறோம். இந்த பார்லிமென்ட்டில் இருந்து நான் விடைபெறப் போகிறேன். சக்தி வாய்ந்த போர் விமானங்களை கொடுக்க உள்ள இங்கிலாந்து அரசுக்கு, முன்னதாகவே எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அவரது உரை முடிந்த பின்னர் பிரதமர் ரிஷி சுனக் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர். தனது உரையை முடித்த பின்னர் இங்கிலாந்து பார்லிமென்ட்டின் தலைவர் சர் லிண்ட்சே ஹோய்லிடம், உக்ரைனின் விமானப்படை பைலட் அணியும் ஹெல்மெட்டை பரிசாக வழங்கினார். அந்த ஹெல்மெட்டில், ‘எங்களுக்கு சுதந்திரம் உள்ளது. அதை பாதுகாக்க தேவையான றெக்கைகளை (சிறகுகள்) எங்களுக்கு கொடுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. பின்னர் இங்கிலாந்து மன்னர் சார்லசை, ஜெலன்ஸ்கி சந்தித்தார். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த அவருக்கும், அரச குடும்பத்தினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, இந்திய நேரப்படி நேற்று இரவோடு இரவாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு சென்றார். பாரிசில் பிரான்சின் பிரதமர் இமானுவேல் மாக்ரன் மற்றும் ஜெர்மனியின் பிரதமர் ஒலாப் ஷோல்சை சந்தித்து பேசினார். போரின் தற்போதைய நிலவரம் குறித்து, இருவரிடமும் விரிவாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, இங்கிலாந்திடம் கேட்ட அதே உதவிகளை இரு நாட்டு பிரதமர்களிடமும் வலியுறுத்தினார்.
உடனடியாக சக்தி வாய்ந்த போர் விமானங்களை எங்களுக்கு வழங்கி, கேம் சேஞ்சர்களாக இருங்கள் என்று இரு நாட்டு பிரதமர்களிடமும் அவர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு, இன்று அதிகாலை பாரிசில் இருந்து தனி விமானம் மூலம் ஜெலன்ஸ்கி, பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்சுக்கு புறப்பட்டார்.