இந்தோனேசியாவின் கிழக்கு பிராந்தியமான பப்புவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கடற்கரையை ஒட்டி இருந்த ஹோட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமையன்று இரவு 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. பப்புவாவின் வடக்கு கடற்கரைக்கு அருகிலுள்ள ஜெயபுராவில் குடியிருப்புப் பகுதிகளைத் தாக்கியதாகவும், இது 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகளுக்குள் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதில் கடற்கரையை ஒட்டி இருந்த ஓட்டல் இடிந்து கடலில் விழுந்ததால் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
தேசிய பேரிடர் தணிப்பு முகமையின் செய்தித் தொடர்பாளர் அப்துல் முஹாரி, “பாதிக்கப்பட்ட நான்கு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக கூறினார். மீட்புப் பணியாளர்கள் உணவு விடுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் உயிர் பிழைத்தவர்களை தேடினர். வீடுகள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவ வசதிகளும் சேதமடைந்துள்ளதாக முஹாரி கூறினார். நகரின் மருத்துவமனையில் சில நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.