மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா நேற்று சிறிது நேரம் வழிநடத்தினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நிதி அமைசர் நிர்மலா சீதாராமன் 2023-24ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இது என்பது குறிப்பிடதக்கது. மேலும் தொழிலதிபர் அதானியின் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற குழு விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போர்க்குரல் தூக்கி வருகின்றனர். நேற்றைய தினம் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். ஆனால் அவரை பேச விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று குரலெழுப்பி கொண்டே இருந்தனர். ஆனால் பிரதமர் மோடி கண்டுகொள்ளவே இல்லை.
இந்தநிலையில் மாநிலங்களவையை தடகள வீராங்கனையான பிடி உஷா, இன்று சிறிது நேரம் வழிநடத்தினார். மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பிடி உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த வருடம், ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் மாநிலங்களவையில் அவைத்தலைவர் இல்லாத சமயத்தில் அவையை நடத்துவதற்காக துணை சபாநாயகர் குழு ஏற்படுத்தப்படும். மாநிலங்களவையை பொறுத்தவரை நாட்டின் துணை ஜனாதிபதிதான் அவைத்தலைவராக இருப்பார். அந்த வகையில் துணை ஜனாதிபதி சிறிது நேரம் ஓய்வுக்காக செல்லும் போது, வேறு காரணங்களில் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால் துணை சபாயகர் குழுவில் இடம் பெற்றிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அவையை நடத்துவர். வழக்கமாக இந்தக் குழுவில் மூத்த உறுப்பினர்கள் இடம்பெறுவதுண்டு. கடந்த டிசம்பர் மாதம் ஏற்படுத்தப்பட்ட இந்தக் குழுவில் பி.டி உஷாவும் இடம் பெற்றார். நியமன எம்.பி ஒருவருக்கு அவையை வழிநடத்தக்கூடிய பொறுப்பு கொண்ட துணை சபாநாயகர் குழுவில் இடம் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
அந்தவகையில் இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனையான பி.டி.உஷா, நேற்று மாநிலங்களவை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. மாநிலங்களவை தலைவரும் துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவை நடவடிக்கைகளில் சிறிது நேரம் பங்கேற்காமல் இருந்தார். அப்போது, பி.டி.உஷா அவைத் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்து சபையை நடத்தினார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில் பி.டி.உஷா கூறும்போது, ‘‘பெரிய அதிகாரங்களுக்கு அதிக பொறுப்பும் உண்டு என்பது பிரான்கிளின் டி ரூஸ்வெல்ட் கூற்றாகும். மாநிலங்களவை கூட்டத்தொடரில் இதை நான் உணர்ந்தேன். மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் மூலம் இந்த பயணத்தை மேற்கொண்டு இருக்கும் நான் புதிய சாதனையை உருவாக்குவேன்” என்று பதிவிட்டுள்ளார்.