தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு தவறி வருகிறது: வேல்முருகன்

சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் விமர்சித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2ஆவது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து 4,800 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த விமான நிலையம் ஏகனாபுரத்தை மையமாக வைத்து அமைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் மொத்தமாக நிலம் எடுக்கப்படுவதால் பொதுமக்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை கோரியுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்பம், பொருளாதார அறிக்கை தயாரிப்பது, விமான போக்குவரத்தின் வளர்ச்சியை ஆய்வு செய்வது, மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் இடையே உள்ள சாலை மற்றும் ரயில் போக்குவரத்து தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 200ஆவது நாளாக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டுள்ளார். அங்கு அவர் போராட்டக் குழு மத்தியில் பேசியதாவது:-

சட்டசபை தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார். இதிலிருந்தே இரட்டை நிலைப்பாடு நன்றாக தெரிகிறது. மத்திய அரசு நிர்பந்திக்கிறது என்பதற்காக தமிழக அரசு துணை போவதா. அதிமுகவிற்கும் திமுகவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. மிகப் பெரிய ரியஸ் எஸ்டேட் நிறுவனங்கள் பரந்தூரை சுற்றி முதலீடு செய்துள்ளன. இவ்வாறு வேல்முருகன் பேசியுள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது தமிழக வாழ்வுரிமை கட்சி. இந்த கட்சித் தலைவர் வேல்முருகன் கடந்த 2021 ஆம் ஆண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். 200 நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேல்முருகன் அறிக்கைகளை வெளியிடுவார். அதில் கூட தமிழக அரசிடம் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கை வைப்பார். ஆனால் இந்த முறை முதல்வர் இரட்டை நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்றும் வேல்முருகன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. போராட்டத்தின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 7 ஏடிஎஸ்பி, 28 டிஎஸ்பி உள்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.