சென்னை – பெங்களூரு சாலை பணிகள் முடியாமல் இருப்பதற்கு தமிழக அரசுதான் காரணம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விவாதம் நடந்து வருகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளிப்பதும், உப்புமா கதையை சொல்லி மத்திய அரசை விமர்சிப்பதும், அதானிக்கும், அரசுக்கும் உள்ள உறவால் நாட்டுக்கு என்ன பயன் என்று அடுக்கடுக்காக எழுப்பப்படும் கேள்விகளும், திராவிட மாடல் ஆட்சி என்று மக்களவையில் புகழப்படுவதுமென தினமும் ஏதாவதொரு எம்பி பேசுபொருளாகிறார்.
இந்த நிலையில், தமிழக நெடுஞ்சாலையில் சாலை மிக மோசமாக இருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் வாதம் வைத்தார். மக்களவையில் எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:-
நாங்கள் உங்களிடம் கோரிக்கை வைக்கிறோம்; சமீபத்தில் எனக்கு ராணிப்பேட்டை முதல் சென்னை வரை பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் மிக மோசமாக உள்ளன. திட்டத்தை செயல்படுத்த தேவையான நிலங்களை மாநில அரசு கொடுத்துவிட்டது. விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், உங்கள் காண்டிராக்டர்கள் அனைவரும் நீதிமன்றம் சென்று விட்டனர். கடந்த 4 ஆண்டுகளாக சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை மோசமாக உள்ளது. 100 கிலோ மீட்டர் பயணிக்க நான்கரை மணி நேரம் ஆகிறது. இது மிகவும் மோசம். உங்களது ஒப்பந்தக்காரர்கள் நீதிமன்றம் சென்று விட்டார்கள் என்று நீங்கள் கூறலாம் ஆனால் இதென்ன அணுகுமுறை? இதற்கு என்ன தீர்வு? ஏன் சாதாரண மக்கள், தமிழக மக்கள் பாதிப்படைய வேண்டும்? குறிப்பிட்ட நேரத்தில் திட்டம் நிறைவடையும் என்பதை உறுதிப்படுத்துங்கள் என்று தயாநிதி மாறன் பேசிவிட்டு அமர்ந்தார்.
அதற்கு பதில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:-
சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பொதுவான பிரச்சினை என்னவென்றால் நானே நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தேன். பிரச்சினை எனது துறையில் இல்லை. இங்கு உங்களது ஒத்துழைப்பும் எனக்கு தேவை. அங்கு கட்டுமான பொருட்கள் ஏதுவும் இல்லை. சில சமயம் மாநில அரசு 3 மாதத்துக்கு அனுமதி வழங்குகிறார்கள். 3 மாசத்துக்கு பிறகு மீண்டும் அனுமதி கோருவது கடினமானது. அங்கு தோண்டுவதற்கு அனுமதி இல்லாததால் சாலையை அமைக்க மிகப்பெரிய தடையாக உள்ளது. மேலும், நிலத்தை கையகப்படுத்துவதில் பிரச்சினை உள்ளது.
சுற்றுசூழல், வன அனுமதி இல்லை. ஆனால், பெங்களூரு சாலையில் பணிகள் நன்கு நடைபெறுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் நிலம் இல்லை, அனுமதி இல்லை, எவ்வாறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொள்வார்கள். தமிழ்நாட்டில் நான் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை. நாங்கள் பல திட்டங்களை வைத்துள்ளோம். இதுகுறித்து பலமுறை மக்களை உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளேன். தமிழ்நாடு முதல்வரிடமும் பலமுறை எனது தகவல்களை அனுப்பியுள்ளேன். ஆனால், நிலம் இல்லாமல், சரியான அனுமதி இல்லாமல் சாலையை எவ்வாறு அமைக்க முடியும். சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள் நிறைவடைய வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். இந்தாண்டு டிசம்பருக்கு முன்பு இந்த பணியை நான் முடிக்க நினைக்கிறன். இதனால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணி நேரத்தில் சென்றுவிடலாம். பெங்களூரு – மைசூரு பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. அடுத்த மாதம் அதை திறக்க பிரதமர் அலுவலகத்தில் தேதி கேட்டுள்ளோம். இதனால் பெங்களூருவில் இருந்து மைசூருக்கு 1 மணி நேரத்தில் செல்லலாம்.
சென்னை – பெங்களூரு சாலையின் முக்கியத்துவம் எனக்கு புரிகிறது. உங்கள் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைத்தால் 100% அந்த பணிகள் நிறைவு பெறும். இந்த கேள்வியை கேட்டதற்கு உங்களுக்கு நன்றி கூறுகிறேன். தமிழ்நாட்டின் அனைத்து உறுப்பினர்களிடமும் நான் கோரிக்கை வைக்கிறேன்; உங்களுக்கு எதாவது தேவை என்றால் அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் அதை நாங்கள் செய்வோம். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதி கட்கரி கூறினார்.