ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து சுயேச்சைகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, நாம்தமிழர் கட்சியினர் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி நிலவுகிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி கட்சித்தலைவர்களை நேரில் சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆதரவு திரட்டினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகமான ஆழ்வார்போட்டையில் நேரில் சந்தித்து பேசினார். செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், அவரது வரவேற்பு சிறப்பாக இருந்தது. கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பேசி தங்களின் முடிவு தெரிவிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கும் அழைத்திருக்கிறோம் என்றும் இளங்கோவன் கூறினார்.
இதனையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். எனது நண்பரும் பெரியாரின் பேரனுமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற மக்கள் நீதி மய்யம் பாடுபடும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பணிக்குழுவையும் கமல்ஹாசன் அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக தலைவருமான முதல்வர் ஸ்டாலின் பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய இருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசனும் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கமல்ஹாசன் வரும் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்கும் 3 நாட்கள் பிரச்சாரம் செய்யப்போகிறார்.