இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பிரச்னைகள் இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்பட வேண்டும். இதற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லாத சூழல் அவசியம். இத்தகைய சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என மத்திய அரசு மக்களவையில் தெரிவித்தது.
மக்களவையில் நேற்று நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது எழுப்பட்ட கேள்விக்குக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவுடன் பேச்சுவாா்த்தை நடத்துவது குறித்த பாகிஸ்தான் பிரதமரின் செய்தி ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, பேச்சுவாா்த்தைக்கான பல்வேறு முன்நிபந்தனைகளை அந்நாட்டு பிரதமா் அலுவலகம் வெளியிட்டிருந்தது. பாகிஸ்தானுடன் சுமூகமான உறவைக் கடைப்பிடிக்க இந்தியா விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னைகளுக்கு இருதரப்பு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வுகாணப்பட வேண்டும். இதற்கு பயங்கரவாதம் மற்றும் வன்முறை இல்லா சூழல் அவசியம். தனது கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியங்களை இந்தியாவுக்கு எதிரான எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்துவதை அனுமதிக்காமல் இருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் வாயிலாக, இத்தகையச் சூழலை உருவாக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது எனத் தெரிவித்தாா்.
அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் சூழலின் காரணமாக, அணு ஆயதங்கள் கடத்தல் உள்ளிட்ட வாய்ப்புகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு மத்திய இணையமைச்சா் பதிலளிக்கையில், ‘இந்தியாவின் அண்டை நாடுகளில் அணு ஆயத பயன்பாடு குறித்து மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பயங்கரவாதிகளின் கைகளில் அணு ஆயுதங்கள் சிக்கும்போது ஏற்படும் ஆபத்துகளை சா்வதேச அரங்கில் இந்தியா தொடா்ந்து எழுப்பி வருகிறது. இதனைக் கண்காணிக்கும் சா்வதேச அமைப்புகளிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது’ என்றாா்.
மதம் தொடா்பான சா்ச்சைக்குரிய கருத்துகளை சிலா் தெரிவிக்கும்போது, இதன் விளைவாக சா்வதேச உறவில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா ? என்ற கேள்விக்கு வி.முரளீதரன் பதிலளிக்கையில், ‘தனிநபா்கள் தெரிவிக்கும் கருத்துகள் அரசின் கருத்தாகப் பிரதிபலிக்காது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் அடிப்படையிலானது. தொடா்ச்சியான தொடா்புகள், பேச்சுவாா்த்தை மற்றும் பயணங்கள் மூலமாக தனது வெளிநாட்டு உறவுகளை இந்தியா கையாண்டு வருகிறது’ என அவா் தெரிவித்தாா்.