கடற்கரையில் பேனா சின்னம் வைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கும், அதனால் பேனா வைக்க கூடாது என்று எச்.ராஜா பேசினார்.
புதுவையில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து தரப்பு மக்களும் பலன் அடையக்கூடிய வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. நாட்டில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் எனில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும். அப்படி என்றால் மூலதன செலவு அதிகரிக்க வேண்டும். தற்போது தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் பட்ஜெட்டில் மூலதன செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் நிதி பற்றாக்குறை 5.1 % ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதி ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை 4.5 ஆக குறைக்க முடியும். அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட ஒரு பட்ஜெட்டாக இது உள்ளது. பிரதமர் மோடி தாக்கல் செய்து விட்டாரே என்ற ஒரே காரணத்திற்காக எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. தேர்தலுக்காக போடப்பட்ட பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகள் கூறுவது போல இது தேர்தலுக்கான பட்ஜெட் தான். ஏனென்றால் இது ஏழை எளிய மக்களுக்காக போடப்பட்டு இருக்கும் பட்ஜெட். அப்போதுதான் வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு வாக்களித்து மீண்டும் வெற்றி அடைய செய்வார்கள்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடக்கிறது என்று சொல்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் அமைச்சர்கள் தொண்டர்களை அடிக்கிறார்கள். தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தனர். அங்கே கலவரம் எதுவும் நடக்கவில்லை. தேசிய அமைப்புகள் செயல்படாமல் இருக்க வேண்டும் என்று சிலர் நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட இயகத்திற்கு ஆதரவாக சீமானும் திருமாவளவனும் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கின்றனர். இது விடியாத ஆட்சி என்பதே சரி. இந்து அமைப்புகளுக்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடு உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை காவல்துறை அதிகாரிகளும் அரசும் பின்பற்ற வேண்டும்.
தமிழகத்தில் விடியல் ஆட்சி நடக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்னால், நடைபெற உள்ள ஈரோடு இடைத்தேர்தல் அவருக்கு சரியான பாடத்தை புகட்டுவோம். இது விடியாத ஆட்சி என்பதே சரியாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் பேனா சின்னம் வைக்கக் கூடாது. இந்துக்களுக்கு விரோதமாகவும், ஆபாசமாகவும் எழுதிய பேனாவுக்கு நினைவுச்சின்னம் தேவையா? அதானி குழும பிரச்சினையால் வங்கிகளுக்கும், எல்.ஐ.சி. நிறுவனத்திற்கும் எந்த பாதிப்பும் இல்லை. ஏனெனில், அவர்கள் வங்கிகளுக்கு கட்ட வேண்டிய வட்டியும் கடனுக்கான தவணையும் நிறுத்தப்படவில்லை. எனவே வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதானி பிரச்சினையால் வங்கிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்து தான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமைதியாகி விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.