துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ள நிலையில் இந்தியர் ஒருவரும் இறந்துள்ளார்.
துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6 ம் தேதி தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது சிரியாவின் எல்லையோர நகராக இருப்பதால் அந்தநாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8, 7.5 மற்றும் 6 என்ற அளவில் ஒரேநாளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவானதால் கட்டங்கள் இடிந்து விழுந்தன. பல ஆயிரம் மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். ஏராளமானவர்கள் பலியாகினர். இதனால் துருக்கி, சிரியா நாட்டுக்கு இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளும் துருக்கி, சிரியாவுக்கு உதவி வருகின்றனர். இந்தியா சார்பில் மீட்புபடையினர் துருக்கி விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் கடும் பனி நிலவும் நிலையில்தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய நிலவரப்படி பலி எண்ணிக்கை என்பது 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயம், படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் துருக்கியில் இந்தியாவை சேர்ந்த 3 ஆயிரம் பேர் உள்ள நிலையில் அவர்களில் 10 பேர் மட்டுமே நிலநடுக்க பாதிப்பு பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அதில் ஒருவர் மட்டுமே மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மாயமான இந்தியர் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்திருப்பதாக துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தூதரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில், ‛‛பிப்ரவரி 6ம் தேதி துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி காணாமல் போன விஜய்குமாரின் உடல் மாலத்யாவில் உள்ள ஓட்டலின் இடிபாடுகளுக்கு இருந்து மீட்கப்பட்டுள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் தொழில்முறை பயணமாக இங்கு வந்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது உடலை விரைவாக இந்தியா அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நிலநடுக்கத்தில் இறந்த விஜய் குமார் உத்தர காண்ட் மாநிலம் பாரிகார்வால் பகுதியை சேர்ந்தவர். இவரது முழுப்பெயர் விஜய் குமார் காட். இவர் கர்நாடகா தலைநகர் பெங்களூருவைச் சேர்ந்த ஆக்ஸி பிளாண்ட் இந்தியா எனும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தான் வேலை விஷயமாக விஜய குமாரை அவரது நிறுவனம் துருக்கிக்கு அனுப்பி வைத்தது. கடந்த மாதம் 23ம் தேதி துருக்கிக்கு சென்ற விஜய்குமார் அங்குள்ள கிழக்கு அனடோலியா மாகாணத்தில் அமைந்திருக்கும் உள்ள மாலத்யாவில் உள்ள 4 ஸ்டார் நட்சத்திர ஓட்டலான ‛அவ்சாரில்’ அறை எடுத்து தங்கியிருந்தார். விஜய் குமார் அங்குள்ள எரிவாயு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் அசிட்டீலின் தொடர்பான கேஸ் ஆலையை இயக்குவது தொடர்பான பணிக்காக துருக்கி சென்றிருந்தார்.
கடந்த 6ம் தேதி அவர் தங்கியிருந்த மாலத்யாவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் இடிந்து சட்டென இடிந்து தரைமட்டமான நிலையில் அவர் இடிபாடுகளுக்குள் சிக்கினார். இந்நிலையில் தான் தற்போது அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்குமார் தனது இடது கையில் டாட்டூ குத்தியிருந்தார். அந்த டாட்டூவை வைத்து அவரது உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அவரது உடல் அருகிலேயே அவரது பாஸ்போர்ட் உள்பட அவருக்கு சொந்தமான பிற பொருட்கள் கிடந்தன. தற்போது அவரது உடலை இந்தியா அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.