என்னை கவர்னராக நியமித்தது தமிழினத்திற்கு கிடைத்த பெருமை என்றும், மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜார்கண்ட் மாநில கவர்னராக தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவல் பரவியதை தொடர்ந்து திருப்பூர் ஷெரீப் காலனியில் உள்ள அவரது வீட்டில் பா.ஜனதா நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள், தொழில் அதிபர்கள் குவிந்தனர். பின்னர் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றதுடன், குடும்பத்தினருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதன் பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மீண்டும் ஒரு கவர்னர் பதவியை ஜனாதிபதியும், பிரதமரும் தந்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், தமிழ் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் தமிழ் மக்கள் மீதும் எந்த அளவிற்கு அவர்கள் அன்பும், பாசமும் வைத்து உள்ளார்கள் என்பதற்கு உதாரணமாக உள்ளது. பழங்குடியின, தாழ்த்தப்பட்ட மற்றும் ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஜார்கண்ட் மக்களின் உயர்வுக்கும், முன்னேற்றத்திற்கும் என்னென்ன வழிகளில் செயல்பட முடியுமோ, அதை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன். இதை எனக்கு கிடைத்த பெருமையாக பார்க்கவில்லை. தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாக பார்க்கிறேன். மேலும் அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதை பார்க்கிறேன். பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் தமிழ் மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் மத்திய, மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக செயல்படுவேன். இவ்வாறு அவர் கூறினார்.