சொத்து குவிப்பு: ஜெயக்குமாருக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்!

சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக ஜெயக்குமாரின் மருமகனான நவீன் குமார் என்பவருக்கும் அவரது சகோதரர் மகேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் ஜெயபிரியா, மருமகன் நவீன்குமார் அந்த நிலத்தை அபகரித்ததாகவும், மேலும் ஜெயக்குமார் தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது எனவும் மகேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை எதிர்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயக்குமார் மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய் மற்றும் சஞ்சய் கரோல் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில், இந்த விவகாரத்தில் வழக்கின் விவரங்களை முழுமையாக ஆராயாமல் உயர்நீதிமன்றம் ஜெயக்குமார் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது என குற்றச்சாட்டை முன் வைத்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஜெயக்குமார் தற்போதும் அரசு பதவியில் உள்ளாரா என கேள்வி எழுப்பினர். அதற்கு, அவர் முன்னாள் அமைச்சர் என்றும் தற்போது அவர் எந்த பதவியிலும் இல்லை என பதிலளித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள், நில அபகரிப்பு புகார் விவகாரத்தில் 4 வாரத்தில் பதிலளிக்க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.