அரசியல் எதிரிகளை குறிவைக்க சிபிஐ, வருமான வரித் துறை போன்ற மத்திய அமைப்புகளை கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:-
துடிப்பான ஜனநாயகத்துக்கு வெளிப்படையான, சுதந்திரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை. எனினும் பாஜக தலைமையிலான ஆட்சியில், நாட்டின் மதிப்பு மிக்க நிறுவனங்கள் முற்றிலும் சுதந்திரம் இழந்துள்ளன.
அரசியல் எதிர்களை இலக்காக வைத்து சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை போன்றவை கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. அரசியல் எதிர்களை குறிவைக்கும் பட்டியலில் பிபிசியில் நடத்தப்படும் வருமான வரித் துறை சோதனையும் சேர்ந்துள்ளது.
இந்திய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அழிவுக்கு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களே காரணம். இதனை அமைதியாக கண்காணித்து வரும் மக்கள், வருகின்ற தேர்தலில் தகுந்த பாடம் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.