புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 40 சி.ஆர்.பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். புல்வாமா தாக்குதல் தினத்தையொட்டி பலரும் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பதிவில், புல்வாமா தாக்குதலில் உயிரழந்த வீரர்களை நினைவு கூர்ந்தார். வலுவான, வளர்ந்த இந்தியாவை உருவாக்க உயிரிழந்த வீரர்களின் தைரியம் நம்மை ஊக்குவிக்கிறது. புல்வாமா தாக்குதலில் தங்களது உயிரை தியாகம் செய்த இந்திய வீரர்களை என்றும் மறக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘புல்வாமா தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி. அவர்களது உன்னத தியாகத்தை இந்தியா எப்போதும் நினைவுகூறும்’ என்று பதிவிட்டுள்ளார்.