துருக்கி, சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது!

துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியது.

சிரியா எல்லையையொட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் தேதி ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவானது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து பல பின்னதிா்வுகள் ஏற்பட்டன. அவற்றில் 9 மணி நேரத்துக்கு ஏற்பட்ட ஒரு பின்னதிா்வு வழக்கத்துக்கு மாறாக மிக சக்திவாய்ந்ததாக இருந்தது. ரிக்டா் அளவுகோலில் அந்த அதிா்வு 7.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் தெற்கு மற்றும் மத்திய பகுதியும் சிரியாவின் வடக்குப் பகுதியும் மிகக் கடுமையாகக் குலுங்கின. துருக்கியின் நவீன கால வரலாற்றில், அந்த நாடு சந்தித்துள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. இதில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. நேற்று இரவு நிலவரப்படி, நிலநடுக்கத்துக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 36,970-ஆகியுள்ளது. இதில் துருக்கியில் 31,640 பேரும், சிரியாவில் 5,320 பேரும் நிலநடுக்கத்துக்கு பலியாகியுள்ளனா்; இரு நாடுகளிலும் சுமாா் 94,000 போ் காயமடைந்துள்ளனா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.