கரூர் மாவட்டம் காவிரி கதவணையில் மூழ்கி புதுக்கோட்டை மாணவிகள் 4 பேர் பலியான நிலையில் தலைமையாசிரியர் உள்பட 3 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பிலிப்பட்டியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் வெவ்வேறு இடங்களுக்கு நடக்கும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் மாணவ-மாணவிகள் திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்றனர். போட்டியை முடித்துவிட்டு அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு திரும்பி கொண்டிருந்தனர். இந்த வேளையில் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை பார்க்க விரும்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாணவி ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த மாணவிகள் கூச்சலிட்டதோடு, அவரை காப்பாற்ற முயன்றனர். இவ்வாறு அடுத்தடுத்து மேலும் 3 மாணவிகள் ஆற்றுக்குள் சிக்கினர். இதனால் 4 மாணவிகளும் ஆற்றில் மூழ்கினர்.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கியவர்களை தேடினர். அப்போது 4 மாணவிகளும் சடலமாக மீட்கப்பட்டனர். இறந்தவர்களின் பெயர்கள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா என்பது தெரியவந்தது. இதில் இனியாவும் லாவண்யாவும் 6 ஆம் வகுப்பு படித்து வந்தனர். தமிழரசி 7ம் வகுப்பும் சோபியா 8ம் வகுப்பும் படித்து வந்தனர். ஆற்றில் விழுந்த மாணவியை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து 4 மாணவிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் மாணவிகளின் பெற்றோர் கதறி அழுதனர்.
அதோடு மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்கள் கவனக்குறைவே மாணவிகளின் இறப்புக்கு காரணம். இதனால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கைகள் வைத்தனர். மேலும் ஆசிரியர்களின் அலட்சியத்தால் தான் மாணவிகளின் உயிர் பறிபோனதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் மாணவிகள் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பொட்டுமணி, விளையாட்டு போட்டிக்கு மாணவிகளை அழைத்து சென்ற இடைநிலை ஆசிரியர் செபாசகாயூ இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி என 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவித்துள்ளார். கரூர், மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.