தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக: ஜெயக்குமார்

தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-

ஒரு காலத்தில் டெல்லியில் தமிழர்கள் அதிகளவில் கோலோச்சினார்கள். ஆனால் 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக, ஒரு ஆளுநரை கூட உருவாக்கவில்லை. ஆனால் ஐந்து ஆளுநர்களை ஆளுநராக உருவாக்கிய பெருமை பாஜகவுக்கு இருக்கிறது. அதேபோல் பல்வேறு மாநிலங்களில் தமிழர்களை ஆளுநராக நியமித்து அழகு பார்க்கும் இயக்கம் பாஜக தான். அதிமுகவுக்கு விசுவாசியாக இருந்ததால் தான் அதிகளவில் பதவிகள் தேடி வந்தது. அதேபோல் பாஜகவுக்கு சிபி ராதாகிருஷ்ணன் விசுவாசியாக உள்ளார். இன்று ஜார்கண்ட் மாநில ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்க உள்ளார். பண்பாளர் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு என்று வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் சட்டமும் இல்லை ஒழுங்கும் இல்லை. சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. நீதிமன்ற வளாகத்திலேயே கொலை நடக்கிறதென்றால், மக்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் கொள்ளை, நகைக்கடை கொள்ளை என ஏராளமான குற்ற சம்பவங்கள் நடந்து வருகின்றனது. குற்றவாளிகளை கைது செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு, செயல்படாத நிலையில் இருக்கிறது.

உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழிப்புடன் இருந்து காவல்துறையை முடுக்கிவிட்டு சட்டம் – ஒழுங்கை பராமரிக்க வேண்டும். மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பை உத்தரவாதத்தை ஏற்படுத்துவது தான் கடமையாக இருக்க வேண்டும். ஆனால் உள்துறை தூங்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொம்மை முதலமைச்சராக தான் இருக்கிறார். இதற்கு தொடர் கொலைகளே சாட்சி. ஒரே நாளில் 9 கொலை என்பது வரலாறு காணாத அளவிற்கு உள்ளது. அதிமுக ஆட்சியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும். ஆனால் அப்படி நடந்தால், உடனடியாக குற்றவாளிகளை பிடிக்கப்படுவார்கள். அதேபோல் குற்றங்களையும் தடுக்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்கா என்ற பெயரை எடுத்தது. இவ்வாறு அவர் கூறினார்.