முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பியா உடைப்பியானு கேட்டா நான் பேனாவை மட்டுமில்லை, கேட்போரின் மண்டையையும் உடைப்பேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் நேற்று இரவு பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-
பேனாவை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது எப்படிப்பட்ட பேனா தெரியுமா என புகழ்கிறார்கள். நான் அதை எப்படிப்பட்ட பேனா என்பதை அடுக்கி பேசினால் வெளியில் தலைகாட்ட முடியாது. அது கொஞ்ச நஞ்ச கொடுமை செய்த பேனா இல்லை. பார்த்து பேசணும், உடைப்பியா சீமான்? என்றால் ஆமாம் உடைப்பேன். இதையே ஓயாமல் கேட்டால், மண்டையை உடைப்பேன். நீங்கள் அதிகாரத் திமிறில் ஆட்டத்தைப் போட்டுப் பேனாவை வைத்தால் என் அதிகாரம் எனக்கு வரும். அப்போது எந்த அடையாளமும் இங்கே இருக்காது. பெயர்த்து எறிந்து விடுவேன்.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 2026 சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துதான் நிற்கும். இதுக்கு மேலும் நீங்கள் ஏமாந்தால் எதுவும் செய்ய முடியாது. திமுகவிற்கு போட்டேன், அதிமுகவிற்கு போட்டேன் என எங்களைத் தூக்கி நடுத்தெருவில் போடுகிறீர்கள். இப்படி முச்சந்தியில் இருந்து கத்திகிட்டே போக முடியாது. இனிமேல் யாராவது போராட்டம் என்று என்னை அழைத்தால் விழுந்து படுத்துக்குவேன். எவன் பிரச்சினை தருகிறானோ அவனுக்கே அதிகாரத்தையும் வலிமையையும் தருவேன் என்றால் இது என்ன மாதிரியான மண்? இதுக்கு எதுக்கு கல்வி? எதுக்கு மூளை என்கிற உறுப்பு?
பிபிசி ஆவணப்படம் எடுத்தற்காக அந்த அலுவலகத்தில் ரெய்டு நடத்துகிறார்கள். பிரதமர் மோடி மிரட்டி பார்க்கிறார். நானும் தான் பேசுகிறேன். எங்கே எனக்கு ஒரு ரெய்டு விடுங்களேன். ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இடைத்தேர்தலில் ஜெயித்து காட்ட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வந்தவரை வசூலித்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 600 கோடி ரூபாய்க்கு குடிக்கும் உங்களுக்கு எதற்கு இலவசம்?. இவ்வாறு அவர் பேசினார்.