குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, மதுரையில் 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற பிப்ரவரி 18, 19 தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்முறையாக தமிழகம் வருகிறார். பிப்ரவரி 18-ம் தேதி டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர், மீனாட்சியம்மன் கோயிலில் இருந்து ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்கிறார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 19-ம் தேதி கோவையிலிருந்து மீண்டும் புறப்பட்டு டெல்லி செல்கிறார்.
இதையொட்டி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பாதுகாப்புக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக, குடியரசுத்தலைவரை வரவேற்கும் விதமாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டியும் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.