கினியாவில் மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி!

ஈகுவடோரியல் கினியாவில் முதல்முறை மார்பர்க் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது.

மார்பர்க் வைரஸ் உலகம் அடுத்து சந்திக்கப் போகும் பேரழிவை ஏற்படுத்துமா? என்ற அச்சம் உண்டாகியிருக்கிறது. இந்த பாதிப்பு ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் முதல் முறை உறுதி செய்யப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது எபோலா வகை வைரஸ் எனக் கூறப்படுகிறது. தற்போது வரை மார்பர்க் வைரஸ் தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் ஈகுவடோரியல் கினியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் செனகலில் உள்ள ஆய்வகத்திற்கு அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஆப்பிரிக்காவிற்கான உலக சுகாதார மண்டல இயக்குநர் டாக்டர் மாட்ஷிடிசோ மொயிடி கூறுகையில், ”மார்பர்க் வைரஸ் விரைவாக பரவக் கூடியது. இந்த மாதிரியை உடனடியாக கண்டறிந்ததற்கு ஈகுவடோரியல் கினியா அரசிற்கு மிக்க நன்றி. அவசர செயல்பாட்டு குழுவினர் அதிரடியாக செயல்பட்டு பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுத்துள்ளனர். இதன்மூலம் மார்பர்க் வைரஸின் பரவலை கட்டுப்படுத்த வழி கிடைத்துள்ளதாக” குறிப்பிட்டார்.

மார்பர்க் வைரஸ் பாதிப்பு என்பது ஒரு தொற்று நோய். எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நேரடியாக தாக்குகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு உடல் உறுப்புகளை பாதிப்பிற்கு ஆளாக்கி செயல்திறனை பெரிதும் குறைக்கிறது. உயிரிழப்பிற்கான சாத்தியக் கூறுகள் 88 சதவீதம் என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த வைரஸ் மிகவும் அரிதான ஒன்று. முதன்முதலில் 1967ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஜெர்மனி மற்றும் செர்பியாவில் பாதிப்புகள் தென்பட்டதாக சொல்லப்படுகிறது.

வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவுவதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு பாதிக்கப்பட்ட மனிதர்களின் எச்சில் காற்றில் பரவுவதால், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், இடங்கள் மூலம் நோய் தொற்று பலருக்கும் பரவுகிறது. அதிகப்படியான காய்ச்சல், தீவிர தலைவலி, உடல் அசதி. 7 நாட்களில் பாதிப்புகள் தீவிரம் அடைந்துவிடும். இதுவரை அதிகாரப்பூர்வ மருந்துகள் எதுவும் இல்லை. நோய் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க நீர்ச்சத்து அதிகப்படியான எடுக்க செய்தல் மட்டுமே தற்காலிக தீர்வாக இருந்து வருகிறது.