மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் உதயநிதி சிற்றுண்டி சாப்பிட்டார்!

சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்து, அவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் பசி, ஊட்டச்சத்து குறைபாட்டைபோக்கி, கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், 1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு ரூ.33.56 கோடி செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே, அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ம் தேதி, மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் அமலுக்கு வந்து 100 நாட்களை கடந்த நிலையில், திமுக தரப்பில் மாநகராட்சி பள்ளிகளில் அடிக்கடி நேரடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. முதல்வர் முதல் அமைச்சர்கள், மாநகராட்சி மேயர்கள் வரை இந்த திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை மாநகராட்சி பள்ளிகளுக்கே சென்று, அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்கள். அங்குள்ள மாணவர்களிடமே நேரடியாக கேட்டறிந்தும் வருவதுடன், அந்த பிள்ளைகளுடனேயே ஒன்றாக உட்கார்ந்து சிற்றுண்டியை சாப்பிடுகின்றனர். இன்றுகூட, சேலம் மாநகராட்சி பள்ளி ஒன்றிற்கு, அமைச்சர் உதயநிதி சென்று ஆய்வு செய்துள்ளார். சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு இன்று காலை சென்றுள்ளார். மாணவர்களுடன் சேர்ந்து சிற்றுண்டி உண்டதுடன், அத்திட்டத்தையும் ஆய்வு செய்தார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினே ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில், “சேலம் மாநகராட்சி திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு இன்று காலை சென்று மாணவர்களுடன் சிற்றுண்டி உண்டு, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம். உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, உதயநிதி பள்ளியில் மேற்கொண்ட ஆய்வு குறித்த வீடியோவும் திமுகவினரிடம் பரவி வருகிறது. அதில், அந்த பள்ளியில் மாணவர்கள் உணவுகூடத்தில் வரிசையாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. அப்போது தன்னுடைய செருப்பை வெளியில் கழட்டிவிட்டு, உள்ளே கூடத்திற்குள் நுழைந்தார் உதயநிதி. அங்கிருந்த குழந்தைகளிடம் சென்று சாப்பாடு குறித்து விசாரித்தார். பின்னர் மாணவர்களுடனேயே, தானும் சேர்ந்து உட்கார்ந்து உதயநிதி டிபன் சாப்பிட்டதுடன், அருகில் அமர்ந்து சாப்பிடும் குழந்தைகளிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அந்த கூடத்தையும், மேற்கூரையையும் சுற்றிலும் பார்வையிட்டார். உதயநிதி, கிச்சனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மளிகை பொருட்களை ஆய்வு செய்து, பொருட்களின் தரம், மற்றும் இருப்பு குறித்து அப்பள்ளியின் ஆசிரியைகளிடம் விசாரித்தார். அதேபோல, மாணவர்களுக்கு, பரிமாறப்படுவதற்காக வரிசையாக பாத்திரங்களில் உணவு வைக்கப்பட்டிருந்தன. அந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக திறந்து, போதுமான அளவு உணவு உள்ளதா? என்பதை பார்த்தார். பள்ளியின் வருகைப்பதிவேட்டினையும் வாங்கி பார்த்த உதயநிதி, அதுகுறித்து ஆசிரியைகளிடம் விசாரித்தார். பள்ளியின் மேற்கூரைகளை பார்வையிட்டதுடன், கழிவறைகளை சுகாதாரமாக உள்ளனவா என்றும் கவனித்தார். இந்த வீடியோவை திமுகவினர் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.