யார் ஆம்பள இல்லை என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்: கே.எஸ் அழகிரி

அரசியல் தலைவர் லட்சியங்களை பேச வேண்டும். கொள்கையை பேச வேண்டும். தன்னுடைய வலிமையை பேச வேண்டும். மகக்ளின் குறைகளை பேச வேண்டும். ஒருவர் ஆம்பளயா இல்லையா என்று பேசுவதற்காகவா எடப்பாடி பழனிசாமி கட்சித்தலைவராக இருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கடுமையாக விமர்சித்து பேசினார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் கடந்த 3 தினங்களாக ஈரோடு இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டேன். அங்கு மக்களிடம் ஒரு எழுச்சி இருக்கிறது. அதிமுக அதைப்பார்த்து அஞ்சுகிறது. இதுதான் அங்கு இருக்கும் உண்மையான விஷயம். எனவே மக்களை சிறை பிடித்து விட்டதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். அதிமுக கூட்டங்களுக்கு கூட்டம் வருவதில்லை. கொங்கு மண்டலத்தில் அதிமுக ஒரு வலிமையான கட்சி. அவர்களுடையெ தொண்டர்கள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்தாலே மிகப்பெரிய கூட்டம் இருக்கும். அவர்களே வருவதில்லை. அதிமுக தொண்டர்களை போக வேண்டாம் என்றா நாங்கள் தடுத்துவிட்டோம். அவர்கள் தொண்டர்கள் கூட்டத்திற்கு போகவில்லை என்பதற்காக எங்களை குறை சொல்வதில் என்ன நியாயம்.

அமைச்சர்கள் பணியாற்றுவது என்பது.. கட்சிக்காரர்கள் பணியாற்றுவது என்பது இயல்பு. அதனால் அரசினுடைய பணிகள் எதுவுமே தடைபடவில்லை. அரசின் பணிகளும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இல்லாத குற்றச்சாட்டை சொல்லுகிறார்கள். ஏனென்றால் அவர்களால் தேர்தலை சந்திக்க முடியவில்லை. அவர்களின் நண்பர்களே அவர்களுக்கு வேலை செய்யவில்லை. கட்சிக்காரர்களே வேலை செய்வது இல்லை. அதுதான் அங்கு நடக்கிறது. அவர்கள் யாரும் பணியாற்றவில்லை என்றாலும் குறை சொல்ல தயராக இருக்கிறார்கள்.

நான் 8 தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன். என்னுடைய அனுபவத்தில் நல்ல முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வன்முறை கிடையாது. ஒழுங்கீனங்கள் கிடையாது. அத்துமீறல்கள் இல்லை. அவரவர்கள் போய் ஓட்டு கேட்கிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் ஓட்டு போட போகிறார்கள். தேர்தலில் விதி மீறல் என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். என்ன விதி மீறல் நடைபெற்றது.. யாரால் நடைபெற்றது என்பதுதான் கேள்வி.

அதிமுக தோல்வி பயத்தால் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அதிமுக சொல்லியெல்லாம் தேர்தல் நிற்காது. ஜெயக்குமார் எதை வேண்டும் என்றாலும் சொல்வார். பணம் கொடுக்கிறதால் யாரும் ஓட்டு போட மாட்டார்கள். எவ்வளவோ தேர்தலில் எவ்வளவோ பேர் பணம் கொடுத்து தோற்றுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய ஆதரவு இருந்தால்தான், நாம் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொண்டால்தான் விரும்பினால் மட்டும்தான் வெற்றி பெற முடியுமே தவிர வெறும் பணபலத்தால் மட்டுமே வெற்றி பெற முடியாது. அப்படி பார்த்தால் அதிமுகவிற்கு கொங்கு மண்டலத்தில் இருக்கும் பண பலம் அளவிற்கு வேறு யாருக்கும் கிடையாது.

மக்களுடைய ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும். தமிழ்நாட்டில் எல்லா மக்களுக்கும் அரசியல் தெரியும். கூலி வேலை செய்பவர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் நன்றாக அரசியல் தெரிந்தவர்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நன்றாக முடிவு செய்து இருக்கிறார்கள். இந்த முறை ஈரோட்டில் எங்களுக்கு வாக்களிப்பார்கள். கூட்டணிக் கட்சிகள் யாரும் புறக்கணிக்கப்படவில்லை.

அமைச்சர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவது தவறில்லை. ஒரு அமைச்சர் எங்கு இருந்தாலும் அரசுப்பணி நடைபெறும். அமைச்சர்கள் மட்டும் என்று பார்க்கக் கூடாது. அவர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் தான். எனவே அவர்கள் பிரசாரம் செய்வதில் தவறு இல்லை. பிரதமர் பிரசாரம் செய்வது இல்லையா? அது குறித்து என்றைக்காவது கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அனைவரும் ஈரோட்டில் உள்ளனர்.

அரசியல் தலைவர் லட்சியங்களை பேச வேண்டும். கொள்கையை பேச வேண்டும். தன்னுடைய வலிமையை பேச வேண்டும். மகக்ளின் குறைகளை பேச வேண்டும். ஒருவர் ஆம்பளயா இல்லையா என்று பேசுவதற்காகவா எடப்பாடி பழனிசாமி கட்சித்தலைவராக இருக்கிறார். அதே கேள்வி எடப்பாடி பழனிசாமியை பார்த்து எங்களுக்கு கேட்க எவ்வளவு நேரம் ஆகும். ஸ்டாலினோ, ராகுலோ மண்டியிட்டு போய் யாரையாவது வணங்கியதாக சரித்திரம் உண்டா. யார் ஆம்பள.. யார் ஆம்பள இல்லை என்பதே நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.